கடந்த வாரம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதே அளவிற்கு நாளை நடைபெறும் மெகா முகாம்களிலும் தடுப்பூசி செலுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 80 லட்சம் பேர் 2-வது தவணையும் போடாமல் உள்ளனர்.
இந்த நிலையில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இந்த முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மெகா முகாம்கள் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் சனிக்கிழமைகளில் தற்போது பள்ளிக்கூடங்கள் செயல்படுவதால் பள்ளிகளில் முகாம்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடக்கூடியவர்கள் பள்ளிகளுக்கு வழக்கம்போல போட சென்றனர்.
ஆனால் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்றதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். சென்னையில் 1,600 முகாம்கள் நடத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான மாநகராட்சி பள்ளிகள் நாளை செயல்படுவதால் மாற்று இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

