ஒமைக்ரான் அச்சத்தால் பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகளவில் உருமாற்ற வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
இதனால், ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசிகள் விநியோகிப்பதில் சிக்கலாகிவிடும் எனவும் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் நோய்த்தடுப்பு, தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் துறையின் தலைவர் டாக்டர் கேட் ஒபிரைன் கூறியதாவது:-
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அபாயக்கட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடுவதுதான் நோயை தடுக்கும் ஆயுதம். ஐரோப்பிய நாடுகளில் உருமாற்ற வகை கொரோனா தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதனால், புதிய தடுப்பூசிகள் தேவைப்படுமா என்று ஆலோசித்து வருகிறோம்.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறன் உருமாற்ற கொரோனா வைரஸ்க்கு எதிராக போதுமானதாக இருக்குமா? என்பது குறித்த போதுமான தரவு எங்களிடம் இல்லை. ஆனால், அதுதொடர்பான ஆதாரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

