அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
விடுதி மாணவர்கள் தங்கி இருந்த பகுதி மற்றும் வளாகங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் சென்று பார்வையிட்டார்.
பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் உள்ளனர்.
இதையடுத்து அண்ணா பல்கலைகழகத்தில் தங்கி படிக்கும் 763 விடுதி மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுடைய ரத்த மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும்.
விடுதியில் மாணவர்கள் கூட்டமாக உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்கள் உணவு அருந்தும் நேரத்தை அதிகரிக்க ஆலோசிக்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி, கல்லூரி கல்வித்துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது.
தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். மாணவ- மாணவிகள் கல்வி வளாகங்களில் உணவு, விளையாட்டு மற்றும் வகுப்புகளுக்கு ஒன்றாக செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

பன்னாட்டு விமான பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். இன்று காலை 8 மணிவரை அதிக இடர்பாடுகள் உள்ள 13 நாடுகளில் இருந்து வந்த 9,012 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள 9,002 பேர் ஒரு வாரம் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிக இடர்பாடு அல்லாத நாடுகளில் இருந்து வந்த 33,102 பயணிகளில் உத்தேசமாக 1,025 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பயணிகளின் ரத்தம் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

