வருகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படுவது சந்தேகம் என்று பா.ம.க. கருதுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தே பா.ம.க. ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வருகிறது.
பா.ம.க.வை பெறுத்தவரை 5.3. சதவீத வாக்கு வாங்கி இருப்பதாக நம்புகிறது.
2019-ல் நடைபெற்ற 22 தொகுதி இடைத்தேர்தலில் பாப்பிரெட்டிபட்டி, திருப்போரூர் உள்பட 4 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெற தங்கள் வாக்கு வங்கியே காரணம் என்று பா.ம.க. நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் தனித்து போட்டியிடவே பா.ம.க. தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கீடு, செய்யப்படவில்லை. அதுமட்டுமல்ல 2024 பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படுவது சந்தேகம் என்று பா.ம.க. கருதுகிறது.
எனவே வரப்போகும் நகர்ப்புற, உள்ளாட்சி தேர்தலின் மூலம் கட்சிக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கி வைக்கவே பா.ம.க.வினர் விரும்புகிறார்கள்.
தனித்து போட்டியிட்டால் செல்வாக்குள்ள இடங்களில் வெற்றி பெறவும் முடியும். இதன் மூலம் கட்சி வளர்ச்சிக்கு பலம் சேரும் என்பது அவர்கள் கணிப்பு.
மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கணிசமான அளவு வெற்றி பெற்றால் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கும் கைகொடுக்கும் என்கிறார்கள்.
எனவே தனித்து போட்டியிட மேலிடம் முடிவு செய்து இருப்பதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். என்றும் பா.ம.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது.

