இரு தினங்களாக சபை அமர்வுகளை புறக்கணித்த சஜித் அணியினர் சபைக்கு வருகை!

206 0

நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் கடந்த இரண்டு தினங்களாக சபை அமர்வுகளை புறக்கணித்திருந்த நிலையில் புதன்கிழமை (8) வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் அச்சுறுத்தலை அடுத்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிரதான எதிர்க்கட்சியினர் சபை அமர்வுகளை புறக்கணித்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (7) நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பிரதான எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பிற்பகல் சபாநாயகருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, கயந்த கருணாதிலக, முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட சிலர் சந்தித்திருந்தனர்.  இதன்போது இன்று முதல் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சு மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது, மனுஷ நாணயக்காரவுக்கு மேலதிக நேரம் வழங்காமை தொடர்பில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து சனிக்கிழமையும் சபையில் சர்ச்சை ஏற்பட்டிருந்த நிலையில், சபைக்குள் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபை அமர்வுகளை புறக்கணிக்கத் தீர்மானித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.