தமிழீழத் தேசிய மாவீரர் நாள்- 2021-யேர்மனி முன்சன்

443 0

தாய் மண் காத்திட தம் இன்னுயிர் ஈர்ந்த எமது மாவீரர்களை தரணியில் நினைவு கூரும் நாள் கார்த்திகை 27. மண்ணுக்குள் விதையாகிப் போனவர்களின்; உயிர்த் தியாகம் எத்தனை ஆண்டுகளானாலும் தமிழ் மக்களின் மனங்களில் அழியாச் சுடராக ஒளி வீசிக் கொண்டேயிருக்கும்.

யேர்மனி முன்சன் நகரில் மாவீரர் நாள் நினைவேந்தல் 04.12.2021 சனிக்கிழமை உணர்வு பூர்வமாக நடைபெற்றது. பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழத் தேசிய பாடல் ஒலிக்கத் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. எமது தேசியத் தலைவரின் உரைத் தொகுப்பு ஒலிக்க விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘சாவினைத் தோள்மீது தாங்கிய சந்தனப் பேழைகளே’ என்ற துயிலுமில்லப் பாடல் ஒலிக்க, அங்கு கூடியிருந்த மக்கள் ஈழவேள்வியில் தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய வீர மறவர்களுக்கு கண்களில் கண்ணீர்மல்க , அவர்களின் தியாகத்தை நெஞ்சில் நிறுத்தி, எமது தேசிய மலர்கொண்டு மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் செய்தார்கள்.

வணக்க நிகழ்வைத் தொடர்ந்து எழுச்சிப் பாடல்களுடன் எமது இளையவர்களால் எம் மக்களுக்கு நடைபெற்ற இனவழிப்பு யேர்மனிய மொழியிலும் ஆங்கில மொழியிலும் உரைகளாக இடம்பெற்றன. நிறைவில் தேசியக்கொடி இறக்கப்பட்டு, ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்’ என்ற பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. ஒவ்வொரு தமிழர் நெஞ்சங்களிலும் அழியா நினைவுகளோடு என்றும் வாழ்வார்கள் எமது மாவீரர்கள் என்பது நிச்சயம்.