ஒதியமலை படுகொலை நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு!(காணொலி)

139 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் ஒதியமலை படுகொலை நினைவு நாள் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி அதிகாலை வேளையில் புகுந்த இராணுவத்தினாலும், சிங்கள காடையர்களாலும் ,அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் ஆண்களை சனசமூக நிலையத்திற்கு வரவழைத்துவிட்டு அவர்களது ஆடைகளை களைந்து அவற்றினால் அவர்களை கட்டி 27 பேரை சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்திருந்ததுடன், 5 பேரை கொண்டு சென்றனர். அவர்களும் பின்னர் கொல்லப்பட்டதாகவே உறவினர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட 32 பேரின் 37 ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

அந்த வகையில் குறித்த ஒதியமலைப் படுகொலையின் 37ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 02.12.2021 இன்றைய தினம், ஒதியமலை சனசமூகநிலைய வளாகத்தில் படுகொலைசெய்யப்பட்டோரின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து ஒதியமலைப் பிள்ளையார் ஆலயத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களுக்காக விசேட ஆத்மசாந்தி வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

குறித்த நிகழ்வில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா-ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.