மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலம் எதிர்கொள்ள நேர்ந்துள்ள பாரிய நட்டமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும்.
இந்த நிலையில் இருந்து வெளியில்வர வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதற்கு தேவையாகும் என ஆளும் கட்சி உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (29) மின்சக்தி அமைச்சு மற்றும் வலு சக்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதிகவிலைக்கு எரிபொருளை கொண்டுவந்து, நிவாரண விலைக்கு மக்களுக்கு விநியோகித்து வருகின்றது.
அதனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரச வங்கிகளுக்கு கடன் செலுத்தவேண்டி இருக்கின்றது. அதேபோன்று மின் உற்பத்திக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைந்த விலைக்கே உராய்வு எண்ணெய் வழங்கி வருகின்றது. அதனாலும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நட்டம் ஏற்படுகின்றது.
மேலும் மின்சாரசபை பெற்றொலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து குறைந்த விலைக்கு பெற்றொலை பெற்றுக்கொண்டாலும் அதனையும் விட குறைந்த விலைக்கே மக்களுக்கு மின்சாரத்தை விநியோகித்து வருகின்றது.
அதனால் மின்சார சபையும் நடத்திலேயே செல்கின்றது. அதனால் இந்த நிலையில் இருந்து இந்த இரண்டு நிறுவனங்களையும் நாங்கள் மீட்கவேண்டும்.
இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இதனைவிடவும் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும். இந்த இரண்டு நிறுவனங்களின் பாரிய நட்டமே எமது பொருளாதாரக்கு பாரிய பிரச்சினையாக ஏற்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் மின்சார சபையும் நட்டத்தில் இயங்கும் இரண்டு முக்கிய நிறுவனங்களாகவே தொடர்ச்சியாக உள்ளன. இந்தத் துறைகளில் பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கம் விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த துறைகளுக்கு வெளிநாட்டு முதலீடு அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அவ்வாறு வெளிநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்படாதவிடத்து மேலும் பல பாதிப்புக்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிவரும். அதனால் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சாரசபையை கட்டியெழுப்ப வெளிநாட்டு முலீட்டாளர் தேவை. இந்த இரண்டு நிறுவனங்களையும் எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கவேண்டும் என்றார்.

