தொடர் மழை எதிரொலி: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

306 0

தமிழகத்தில் மழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியால், தமிழகத்தில் மழை மற்றும் மழை பாதிப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.