தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி – பிறேமன் Blender

1049 0

யேர்மனி வடமாநிலத்தின் “தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021” பிறேமன் நகரத்திற்கு அருகாமையில் உள்ள பிலென்டர் எனும் இடத்தில் மக்கள் எழுச்சி பொங்க நடைபெற்றதோடு, நுண்கிருமித்தொற்று விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் படை சூழ்ந்து மாவீரர் நினைவில் மண்டபம் நிறைத்தனர்.

ஜரோப்பியநேரம் முற்பகல் 11:00 மணியிலிருந்து மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தாயகத்தில் இறுதியுத்தம் நிறைவுவரை மக்கள் தொண்டாற்றிய திரு.கஜன் அவர்கள் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளிப்பை வழங்கிவைத்தார்.

தமிழ் இளையோரால் மிக நேர்த்தியாக ஒழுங்கமைப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021 நிகழ்வுகள் ஜரோப்பியநேரம் பிற்பகல் 12:55 மணிக்கு யேர்மன் அரசின் பிறேமன் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் அவரது துணைவரும் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க, மதியம் 13:05 மணிக்கு தமிழ் கல்விக்கழக வடமாநில செயற்பாட்டாளர் திருமதி.சயிந்திகா சுஜீந்திரன் அவர்கள் தமிழீழ தேசியக்கொடியினை ஏற்றிவைத்ததுடன், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரிவுசார் செயலணிகளின் கொடிவணக்க அணிவகுப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர்நாள் உரைத்தொகுப்பு திரையிடப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் 2021 இற்கான கொள்கைவகுப்புரையும் மக்களுக்காக ஒலிக்கவிடப்பட்டது.

 

மணி ஓசை எழுப்பப்பட்டு மாவீரர் பாடல் ஒலிக்க,நிகழ்விடமே மாவீரர் நினைவலைகளை சுமந்து விடுதலை உணர்வு கொண்டு நின்றது.
அகவணக்கத்தை தொடர்ந்து முதன்மைச்சுடரினை மேஜர் இசைத்தம்பி (சுஜிமன்) அவர்களின் சகோதரி திருமதி. சியாமளன் தர்மினி அவர்கள் ஏற்றிவைத்தார்.

உளம் நிறைய மாவீரர்களின் நினைவுகளை தாங்கி, மாவீரர்களின் உறவுகளைத் தொடர்ந்து பொதுமக்களும் மாவீரர் துயிலும் இல்லத்தில் மலர்களைத் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மாவீரத்தின் தெய்வங்களை போற்றி தேசவிடுதலையை நெஞ்சிலே விதைத்தனர்.

மாவீரர்நாள் எழுச்சி நிகழ்வாக பிறேமவோட,பீலவெல்ட்,கம்பேர்க், ஒஸ்னாபுறுக் மற்றும் பிறேமகாவன் நகர தமிழாலய மாணவர்களின் எழுச்சி நிகழ்வுகளுடன் மக்கள் எழுச்சி நிகழ்வுகளும் மாவீரர்நாள் அரங்கை உணர்வேற்றி ஆட்கொண்டது.
யேர்மனி கலை பண்பாட்டுக் கழக நடன ஆசிரியர் திருமதி.துஷ்யா ஜெகதீஸ்வரன் அவர்களின் நெறியாள்கையில் அவரது மாணவர்களால் “தடைகளை உடைப்போம்” என்ற சிறப்பு நடனம் அரங்கையே நிமிரச் செய்து பார்வையாளர்களின் சிறப்புப் பாராட்டுகளை பெற்றது. நடன ஆசிரியரும் மாணவர்களும் இந்நிகழ்வுக்கென நகரங்களுக்கிடையில் நீண்ட நேர பயணத்தை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யேர்மனி வடமாநிலத்தின் தமிழீழத் தேசிய மாவீர்நாளில் 2021 இல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநில செயற்பாட்டாளர் திரு. திருநிலவன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையில் தமிழின எதிரிகளால் திட்டமிட்டு தமிழ் மக்களிடையே மட்டுமன்றி செயற்பாட்டாளர்களிடையேயும் விதைக்கப்படும் தேவையற்ற முரண்பாடுகள் பற்றி தெளிவுபடுத்தினார் . இன்றைய உலகப் போக்கில் தமிழினம் மீதான இனப்படுகொலையை உலகின் முன் நிறுவுவதன் அவசியம் பற்றியும் அதற்காக தமிழ் மக்களாகிய நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கினார். மக்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களை ஒவ்வொரு நகரங்களிலும் அணுகி தமிழினம் மீதான இனப்படுகொலை தொடர்பான சாட்சியங்களை ஜக்கிய நாடுகள் சபைக்கு வழங்குவதற்கான வழிமுறைகளை கேட்டறியலாம் எனவும் பல அமைப்புகள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இதற்கான வேலைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும்
குறிப்பிட்டுக் கூறினார்.

இவ்வாண்டின் சிறப்பு வெளியீடுகளாக கார்த்திகைத்தீபம் சஞ்சிகை, மேதகு திரைப்பட விரலி மற்றும் நூறு விடுதலைப்பாடல்களுக்கான பின்னனி இசை விரலி என்பன செயற்பாட்டாளர்களால் வெளியிட்டுவைக்கப்பட்டது.

மாலை 16:20 மணியளவில் உறுதிஉரையை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வடமாநில செயற்பாட்டாளர் திரு. திருநிலவன் அவர்கள் கூற அரங்கத்தில் எல்லோரும் உறுதிஉரை கூறி தேசவிடுதலைக்காய் உறுதிபூண்டு நின்றனர்.

தமிழீழ தேசியக்கொடியினை தமிழ் கல்விக்கழக வடமாநில செயற்பாட்டாளர் திருமதி. சயிந்திகா சுஜீந்திரன் இறக்கிவைக்க, தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வடமாநில செயற்பாட்டாளர் திரு. திருநிலவன் அவர்கள் கையேற்றுக்கொண்டதொடு “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்..” என்ற பாடல் இசைக்கப்பட்டு, மாவீரரின் கனவை நனவாக்கும் உறுதியுடன் தமிழரின் தாரகமந்திரமாம் “தமிழரின் தாகம் தழீழத்தாயகம்” என்ற முழக்கத்துடன் தமிழ் இளையோரின் நேர்த்தியான ஒழுங்குபடுத்தலில் யேர்மனி வடமாநிலத்தின் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021 நிறைவு பெற்றது.