மாங்குளத்தில் மதம் மாற்ற சென்ற குழுவினர் அச்சுறுத்தல் விடுத்ததாக காவற்துறையில் முறைப்பாடு-வானுடன் மூவர் கைது

352 0

மாங்குளம், கிழவன்குளம் பகுதியில் மதம் மாற்றச் சென்ற சபையைச் சேர்ந்த ஒரு குழுவினர் தனக்கு பேசி, அச்சுறுத்தல் விடுத்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மாங்குளம் காவற்துறையினரால் வாகனத்துடன் மூவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாங்குளம், கிழவன்குளம் பகுதிக்கு ஹயஸ் ரக வான் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றில் நேற்றுமுன்தினம் (27) சென்ற ஒரு குழுவினர் அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று அவ் வீட்டு குடும்பஸ்தரை அழைத்து தமது மதத்திற்கு மாறுமாறு கலந்துரையாடியுள்ளனர். இதன்போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு குறித்த குடும்பஸ்தரை அங்கு சென்ற சபையை சேர்ந்தவர்கள் பேசியதுடன், கடவுளின் பெயரால் சாபமிட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர் மாங்குளம் காவற்துறையினர் மற்றும் 119 காவற்துறையினர் ஆகியோருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் நேற்று (28) அங்கு வருகை தந்த ஹயஸ் ரக வாகனத்தையும், அதனுள் வந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மாங்குளம் காவற்துறையினர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.