யேர்மனியில் மாவீரர்நாள் 2021 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினால் திட்டமிட்டது போன்று ஐந்து இடங்களில் எழுச்சியாக நடைபெற்றுள்ளது.
குறிப்பாக மத்திய மாநிலம் Schwelm நகரில் அனைத்து முன்பணிகளும் நிறைவு செய்து, ஆயத்தப்படுத்தல்களில் இருந்த இறுதி நேரத்தில் கொரோனா என்னும் கொடிய கிருமியின் தாக்க அதிகரிப்பினால் அந் நகரத்து சுகாதார திணைக்கழகத்தினரால் நிறுத்தப்பட்டிருந்தது.
யேர்மனியில் அதிகளவு தமிழ்மக்களைக் கொண்ட மத்திய மாநிலத்தில் இந்த அசாதாரண சூழ்நிலை யேர்மனியின் அனைத்து செயற்பாட்டாளர்களுக்கும் மனவேதனையினையும், ஒருவித மனச்சோர்வினையும் ஏற்படுத்தியது. ஆயினும் மனம் சோர்ந்து விடாது ஒருசில மணி நேரங்களில் தங்களைத் தாங்களே ஆற்றுகைப்படுத்தி, அடுத்தகட்ட பணிகளுக்கு ஆயத்தமாகி வூப்பெற்றால் நகரத்தில் ஓர் மண்டபத்தை தெரிவுசெய்தனர்.
குறுகிய காலநேரத்திற்குள் கிடைத்த மண்டபத்தினை மிகச்சிறப்பாக ஒழுங்கு செய்து, மாவீரர் துயிலுமில்ல நிகழ்வுகளை வழமைபோன்றே நடாத்திய அந்த ஓர்மகுணம் எமக்கு எமது இயக்கம் அளித்த கொடை எனவும், இரவு முழுவதும் மண்டபத்தடையின் பெருவலியினை மனதின் ஒரு பக்கத்தில் சுமந்துகொண்டு அயராது பணியாற்றிய அனைத்துப் பணியாளர்களுக்கும், தோளோடு தோள் நின்ற மக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.




































































































































































