ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல்

232 0

இயக்குனர் கௌதமன் மீது தாக்குதல் நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இயக்குனர் கவுதமன் போராட்டம் நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது: உச்சநீதிமன்ற தடையால் 3வது ஆண்டாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறும் என மத்திய, மாநில அரசுகள் மக்களிடம் தவறான நம்பிக்கை தந்தன. போட்டி நடக்கும் என கூறிய ஆட்சியாளர்கள் அது சாத்தியமில்லை என இரட்டை வார்த்தையில் பேசியுள்ளனர் என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அசம்பாவிதம் இன்றி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீராவேசமாக கூறினார். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் போட்டி நடத்தும் லட்சணமா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் தடியடி நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேபோல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.