திருக்கோவில் வில்காமத்தில் புதையல் தோண்டிய 11 பேர் கைது!

310 0

அம்பாறை திருக்கோவில் காவற்துறை பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேரை நேற்று வியாழக்கிழமை (25) இரவு கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டலுக்கான உபகரணங்களையும் மீட்டுள்ளதாக திருக்கோவில் காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள மலையில் கல்லுடைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மலைக்கு அருகில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஒரு குழுவினர் ஈடுபட்டுவருவதாக காவற்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியை காவற்துறையினர் முற்றுகையிட்டபோது அங்கு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தம்பிலுவில் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் அலவாங்கு மண்வெட்டி மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்