யுகதனவி வழக்கு – ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

172 0

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் மேற்கொண்டுள்ள தீர்மானம் மற்றும் எரிவாயு விநியோக ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரிய அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிக்க ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (26) அழைக்கப்பட்ட போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகியிருந்த போதிலும், குறித்த அமைச்சரவை உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய அமைச்சர்கள் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை விசேடம்சமாகும்.

இதன்படி அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராக மாட்டார் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா ஆஜராவதாக நீதிமன்றில் இன்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மனுக்கள் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.