எதிரிகளை கொன்று பாலத்தில் தொங்கவிடும் கொடூரம்- மெக்சிகோவில் தொடரும் போதைக்கும்பல் வன்முறை

212 0

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் போதைக் கும்பல் தொடர்பான வன்முறையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல்களில் உயிரிழப்புகளும்  ஏற்படுகின்றன. எதிரிகளின் தலையை துண்டித்தும், உடல் உறுப்புகளை சிதைத்தும் கொடூரமாக கொல்லும் வன்முறைக் கும்பல், அந்த உடல்களை நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களில் கட்டி தொங்கவிடுகின்றனர். இதனால் நெடுஞ்சாலை பகுதிகளில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த வாரம் ஜாகெட்கஸ் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். 9 பேரின் உடல்கள் மேம்பாலத்தில் தொங்கிய நிலையிலும், ஒருவர் உடல்  சியுதத் கவுதமாக் நகரிலும் மீட்கப்பட்டன.
இந்நிலையில் ஜாகெட்கஸ் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலை மேம்பாலத்தில் தொங்கிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. சான் ஜோஸ் தி லால்டஸ் நகரில் இந்த உடல்கள் மீட்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைப்பு கூறி உள்ளது.
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் போதைக் கும்பல் தொடர்பான வன்முறையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை விட 3.4 சதவீதம் குறைவு  என தெரிவிக்கப்பட்டுள்ளது.