சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை ´மேதகு பிரபாகரன்’ என கூறிய கஜேந்திரன் (காணொளி)

432 0

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை “மேதகு பிரபாகரன் ” என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோது, குழப்ப நிலை ஏற்பட்டது.

அத்தோடு மாவீரர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்

இதனை மறுக்கும் வகையிலேயே செல்வராசா கஜேந்திரன்,தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை “மேதகு பிரபாகரன்” என்று தெரிவித்துள்ளார்

இதன்போது ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல எழுந்து, பயங்கரவாத தலைவர் ஒருவரை இலங்கையின் நாடாளுமன்றத்தில் “மேதகு” என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துரைத்த சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், அது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் உரிமை என்று குறிப்பிட்டார்.

எனினும் இது தொடர்பில் தாம் சபாநாயகருக்கு தெரியப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

எனினும் ஹன்சார்ட்டில் (பதிவேடு) இருந்து குறித்த பதத்தை நீக்கவேண்டும் என்று சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம், சபையின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அதனை சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

தமக்கிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அறிவிக்க மாத்திரமே முடியும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கமுடியும். எனினும் அந்த கருத்துக்களை ஏனைய உறுப்பினர்களால் மௌனிக்கச்செய்யமுடியாது என்று குறிப்பிட்டார்.

நன்றி – கோணம்