எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல, நாட்டில் உணவு பொருட்களுக்குத் தட்டுபாடு ஏற்படாது

207 0

எதிர்க்கட்சிகள் கூறுவதைப்போல, நாட்டில் உணவு பொருட்களுக்குத் தட்டுபாடு ஏற்படாது எனத் தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நெல் உற்பத்திக்காக எந்தவோர் இரசாயன உரமும் இறக்குமதி செய்யப்படாது எனவும், மரக்கறி உற்பத்திக்கே விசேட உர இறக்குதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் நேற்று (22) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நனோ நைட்ரஜன் உர இறக்குமதி தொடர்பில், விவசாய அமைச்சர் என்றவகையில் தனக்கும் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை என்றார்.

“நனோ நைட்ரஜன் தொடர்பில் சந்தேகங்கள் இருந்தால் கோப் குழுவுக்கு அழைத்து விசாரணை செய்யுங்கள். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலைக் கோருங்கள், இது தொடர்பான எந்தவொரு விவாதத்துக்கும் நான் தயார்“ என்றும் குறிப்பிட்டார்.

“மரக்கறிகளின் விலைகள் கடுமையாக அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுகொள்கிறோம். நாட்டில் கடந்த 3 மாதங்களாகத் தொடர்ந்து பெய்த மழையே இதற்குக் காரணம். எனவே, மரக்கறி உற்பத்திக்கு தேவையான விசேட உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைவிடுத்து நெல் உற்பத்திக்குத் தேவையான இரசாயன உரம் ஒருபோதும் இறக்குமதி செய்யப்படாது“ என்றார்.