’எதிர்க்கட்சிக்கு தேர்தல் தண்டனை கிடைக்கும்’

167 0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் பைத்தியம் என விமர்சிக்கிறார்கள். இதுவே நாட்டில், ஜனாதிபதி உருவாக்கியுள்ள ஜனநாயகம் எனத் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, உரிய நேரத்தில் தேர்தலை நடத்தி, மக்கள் தண்டனையை எதிர்க்கட்சிக்குப் பெற்றுக்கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.

வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  விவாதத்தில் நேற்று (22) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தேர்தலை நடத்துவதற்கான பொருத்தமான நாளில் தேர்தலை அரசாங்கம் நடத்தும். தேர்தல் நடக்கும் போது, மக்கள் வழங்கும் தண்டனை எதிர்க்கட்சிகளுக்குக் கிடைக்கும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வுக்கு கடந்த காலங்களில் உதவியவர்களே தற்போது விமர்சிக்கிறார்கள்.
விமர்சனங்களுக்கு வரையறைகள் இருப்பதை எதிர்க்கட்சிகள் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியை பைத்தியம் என விமர்சிக்கிறார்கள். இதுவே ஜனாதிபதி நாட்டில் உருவாக்கியுள்ள ஜனநாயகம். ஜனாதிபதி பைத்தியம் என விமர்சிப்பதால் நாம் குழப்பமடையப்போவதில்லை என்றார்.

ஜனாதிபதி பெயர் தொடர்பில் பலருக்குப் பிரச்சினை இருக்கிறது. 2 வருடங்களுக்குப் பின்னரே ஜனாதிபதியின் பெயர் கோட்டாபய நந்தசேன என்பது தெரியவந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

எரிபொருள் தட்டுப்பாடு என்றார்கள். மக்களும் அதனை நம்பி வரிசையில் நின்றார்கள். தற்போது நாட்டில் எரிபொருள் வரிசை இருக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

தடுப்பூசிகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு சிறந்த தடுப்பூசியான ஃபைசர் தடுப்பூசியை அரசாங்கம் வழங்கியது என்றார்.