சுவிசில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி 2021

456 0

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் நாடு தழுவிய வகையில் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்திய பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி
சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் இளையோரும் வளர்ந்தவர்களும் தமது இன அடையாளங்களையும் மாவீரர் தியாகங்களையும் அறிந்துபோற்றுவதற்காகவும், பேச்சாற்றலையும் கவிகளை ஆக்கிக் கவிபாடும் திறனையும் வளர்த்துக்கொள்வதற்காகவும் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி ஆகியன நடாத்தப்பெற்று வருகின்றன.

அந்தவகையில் கடந்த 13.11.2021 சனிக்கிழமை சூரிச், பேர்ண் ஆகிய மாநிலங்களிலும் 14.13.2021 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்திலும் பேச்சுப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. 5வயதுப்பிரிவு முதல் 22வயதும் அதற்கு மேற்பட்ட வயதுப்பிரிவுக்குமான பேச்சுப்போட்டியில் 165 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். தாய்மொழி, தாய்நாடு, தமிழீழத்தேசியத் தலைவர், மாவீரர் தியாகம், தாயகம் நோக்கிய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் போன்ற பல்வேறு கருப்பொருள்களைக் கொண்ட பேச்சுகள் போட்டியில் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவற்றை மனனம் செய்து பேச்சுக்குரிய உணர்வு, வெளிப்பாடுகளுடன் அரங்கேற்றி தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தியிருந்தனர்.

21.11.2021 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய வகையில் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்பெற்ற எழுச்சிக்கவிதைப் போட்டி மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு மாவீரர்களுக்கான பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய இப்போட்டியில் 35இற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குகொண்டனர். முற்பகல் கவிதை எழுதும் போட்டியும், பிற்பகல் எழுதிய கவிதையைப் படித்தளிக்கின்ற போட்டியும் நடைபெற்று மாலை 17:30 மணிக்கு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பெற்றதோடு பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசிலும் சான்றிதழும் வழங்கப்பெற்றது.

தமிழ் மொழி, தமிழீழத் தாயகம், தமிழீழத் தேசியத்தலைவர், தமிழீழத் தேசிய மாவீரர், தமிழீழத் தேசியக்கொடி, தமிழீழத் தேசியச் சின்னங்கள் ஆகிய கவிதைப் போட்டிக்கான விடயப்பரப்புகளை உள்ளடக்கிய கவிதைத் தலைப்புகளில் கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு என நான்கு பிரிவுகளிலும் பங்குபற்றிய அனைத்துக் கவிஞர்களும் தங்கள் கவி வாண்மையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். அதிமேற்பிரிவிலே பங்குபற்றிய திருமதி சறோஜினிதேவி பாலகுமாரன் அவர்கள் ‘எழுச்சிக்கவி 2021’ என்ற விருதினைத் தனதாக்கிக் கொண்டார்.

பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் எதிர்வரும் 27.11.2021 சனிக்கிழமை பிறைபேர்க் நகரில் நடைபெறவுள்ள தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் வழங்கப்படும்.
சுவிஸ் நாட்டில் நடைமுறையிலுள்ள கோவிட் 19 நோய்த்தொற்றுப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி ஆர்வத்துடனும் தேசியப்பற்றுடனும் கவிதைப்போட்டியிலும் பேச்சுப்போட்டியிலும் பங்குபற்றிய போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களை உற்சாகப்படுத்தி பங்குபெறச்செய்த உறவுகளுக்கும் மற்றும் போட்டி சிறப்பாக நடைபெற துணைநின்ற தமிழின உணர்வாரளர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

”தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”