யாழ் வலி வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லும் பாதை திறப்பு(காணொளி)

282 0

jaffna uraniயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கான பாதை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் தினமாகிய இன்றையதினம் ஊறணிக்கடற்கரைக்கு செல்வதற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட பாதையினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜென்றல் மகேஸ் சேனநாயக்க, தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

தையிட்டி வடக்கு ஜெ.249 ஊறணி கிராமத்தின் ஆவளை சந்தியிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதையே இராணுவத்தினால் சீரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

திறந்து வைக்கப்பட்ட கடற்பாதையினூடாக மட்டும் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்ல முடியும் என்றும், ஊறணி கடற்கரையில் 400 மீற்றர் அளவு தூரத்தில் மட்டும், மீனவர்கள் படகுகளை நிறுத்தி கடற்றொழில் செய்வதற்கேற்ப இராணுவத்தினர் கடலின் இரு பகுதிகளிலும் எல்லையினை அமைத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் டிசம்பர் 08 தொடக்கம் 14 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நல்லிணக்க வாரத்தில் குறித்த ஊரணி கிராமத்தில் மீள்குடியேறிய மக்கள் கடற்றொழிலுக்குச் செல்வதற்கு ஆரம்ப கட்டமாக இப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.