ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: துரைமுருகன்

247 0

201701140841137995_Tamil-Nadu-government-has-taken-action--hold-jallikattu_SECVPFதமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

பூந்தமல்லியில் தி.மு.க. சார்பில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவுக்கு பூந்தமல்லி நகர செயலாளர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு தொண்டர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர். பின்னர் கோலப்போட்டி, பேச்சு போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவில் துரைமுருகன் பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ டெல்லி சென்று மத்திய அரசை அணுகவில்லை. தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் யார்? என்பது குறித்தே ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் யார்? என்பது வருகிற 23-ந் தேதிக்கு பிறகுதான் தெரியும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்த போது பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு, நீதிமன்றத்தில் வழங்கிய பிரமாண பத்திரத்தில் ஜல்லிக்கட்டை கலாசார பண்பாட்டு விளையாட்டு என்று குறிப்பிடாமல் மதம் சார்ந்த விளையாட்டு என்று தவறுதலாக தெரிவித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முன்னாள் எம்.பி.கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், காயத்ரி ஸ்ரீதரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.