விவசாயக் காணிகளை விடுவிக்க எல்லைகள் அடையாளம்

233 0
வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் இருந்த பொத்துவில், வேகாமம் 450 ஏக்கர் விவசாயக் காணிகளை விடுவிக்கும் பொருட்டு, காணிப் பரப்புகள் எல்லையிட்டு அடையாளப்படுத்தப்பட்டன.

இக்காணிகளை விடுவிப்பது தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப், ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு வநதிருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கிழக்கு மாகாண ஆளுநர் செயலணி ஊடாக வேளாண்மை செய்கை பண்ண ஏதுவான காணிகளை விடுவிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரபின் தலைமையில், வேகாமம் பிரதேசத்துக்கு வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் ஆகியோர் இன்று (18) கள விஜயம் மேற்கொண்டு, மீட்கப்படக் கூடிய காணி எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டன.

வேகாமம் பகுதியில் 1956களில் விவசாய செய்கைக்காக கொடுக்கப்பட்ட சுமார் 1,900 ஏக்கர் வரையிலான காணிகள் 2006ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்குரியதாக மாற்றப்பட்டிருந்தன. அதன்பின்னர் இக்காணிகள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன.

குறித்த காணிகளில் ஏறத்தாழ 450 ஏக்கர் அளவில் விடுவிக்க முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூட பரிந்துரைகளை வழங்கியிருந்தன.

லாகுகல -பொத்துவில் வன ஒதுக்கங்களுக்கான எல்லைகளைத் தீர்த்து வைத்தல் மற்றும் அங்குள்ள வயல் நிலங்கள், புல் நிலங்களை விடுவித்தல் சம்பந்தமாக தன்னால் ஏற்கெனவே வன ஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அலுவல்கள் சார் அமைச்சினுடைய ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் தெரிவித்தார்.