அதிகளவு கொள்வனவு காரணமாக சில பெற்றோல் நிலையங்களில் செயற்கை தட்டுப்பாடு!

246 0

அதிகளவு கொள்வனவு காரணமாக சில பெற்றோல் நிலையங்களில் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வதந்தியால் ஏற்பட்ட நிலைமை என்றே இதனை நாங்கள் கருதுகின்றோம். தேவையான எரிபொருள் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கையிருப்பில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்று மதியம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,யாழ் மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக இடம்பெறுகிறது. அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.

வடமாகாண பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளருடன் நாம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது நேற்றைய நிலையில் காங்கேசன்துறை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலையில் 26 லட்சம் லீற்றர் டீசலும் 155,000 லீற்றர் 92 ஒக்ரைன் பெற்றோலும் 165,000 லீற்றர் மண்ணெண்ணெயும் காண்ப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 66,000 லீற்றர் 92 ஒக்ரைன் பெற்றோல் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

பெற்றோல் விநியோகத்தை தங்குதடையின்றி மேற்கொள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவே பொதுமக்கள் முண்டியடித்து தட்டுப்பாடு வருவதாகக் கருதி அதிகமாக கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தாமல் தேவையான அளவை மாத்திரம் கொள்வனவு செய்யுங்கள்.