உயர்தர அனுமதிக்காக வந்த மாணவி விபத்தில் பலி

195 0

உயர்தர அனுமதிக்காக பாடசாலைக்கு வந்த மாணவி ஒருவர் விபத்தில் ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று,  கிளிநொச்சியில், இன்று (15) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது்.

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு  வருகை தந்த மாணவியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பாடசாலையில்  க.பொ.த சாதாரண தரம் கல்வி  கற்ற மாணவிகள் மூவர், உயர்தர கல்விக்காக, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு
அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்தனர்.

இதன் போது,  ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக உள்ள மஞ்சள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது, ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.

இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது, பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதில், ஹன்ரர் வாகனம் பட்டாவுடன், மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகள் மீது மோதியுள்ளன.

இதன்போது சம்பவ இடத்திலயே, திருவாசகம் மதுசாளினி (வயது 17) என்ற மாணவி உயிரிழந்துள்ளதுடன்,  மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை, சைக்கிளில், நாளாந்தம் ஊற்றுப்புலத்தில் இருந்து கிளிநொச்சிக்கு விறகு  வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி என்பதுடன், மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளை உயர்தரத்துக்கு கற்பித்து அனுப்பிய நிலையில், முதல் நாளே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த விபத்தை அடுத்து, சிவில் சமூக அமைப்பினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் இணைந்து, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்

வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய பொலிஸார் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும் வாகன சாரதிகள் விழிப்புணர்வின்றி வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களை கண்டித்து,   குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.