சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய 4,810 பேர் மீட்பு

417 0

சென்னையில் தண்ணீர் தேங்கி உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்டு வெளியில் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் 13 மீட்பு குழுக்கள் அனைத்து பகுதிகளிலும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன.

இதுவரை 4,810 பேர் மீட்கப்பட்டு 87 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,844 பேர் ஆண்கள் ஆகும். 1,963 பெண்களும், 994 குழந்தைகளும், 9 திருநங்கைளும் வெள்ள பாதிப்பில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏழுகிணறு பகுதியில் மாநகராட்சி சமுதாய கூடம், வண்ணாரப்பேட்டை கெனால் தெரு சமுதாயக் கூடம், வேப்பேரியில் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, புளியந்தோப்பு அங்காளம்மன் கோவில் தெரு சமுதாயக்கூடும் உள்ளிட்ட பல இடங்களில் மீட்கப்பட்ட பொதுமக்கள் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுபோன்று தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

தண்ணீர் தேங்கி உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மீட்டு வெளியில் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளை சென்னை மாநகரில் உள்ள 12 போலீஸ் துணை கமி‌ஷனர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.