கடும் மழை, 15 பேர் பலி- வடமாகாணத்தில் பெரும் பாதிப்பு .

311 0

இலங்கைத்தீவில் கடந்த தினங்களாகப் பெய்துவரும் கடும் அடை மழையினால் வெள்ளம், மின்னல், காற்றுடன் கூடிய காற்றினால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் முற்றாக முழ்கியுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் தொடர் அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிப்படைந்துள்ளது. அத்துடன் பல வீதிகளும் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

இதேவேளை 17 மாவட்டங்களிலுள்ள 7,529 குடும்பங்களைச் சேர்ந்த 28,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறுகின்றது.

நீரில் மூழ்கி 9 பேரும் மண்சரிவு காரணமாக 4 பேரும் மின்னல் தாக்கத்தால் 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

470 குடும்பங்களைச் சேர்ந்த 1,688 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பதுளை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, முல்லைத்தீவு, கொழும்பு, திருகோணமலை, மன்னார், இரத்தினபுரி, களுத்துறை, புத்தளம், அநுராதபுரம், யாழ்ப்பாணம், காலி, கேகாலை, கிளிநொச்சி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் 3,501 குடும்பங்களைச் சேர்ந்த 12,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டங்களில் 13 வீடுகள் முற்றாக அழிந்துள்ளன. மேலும் 802 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மஹா ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால், குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹாவெல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

களுகங்கை மில்லகந்த பகுதியிலும், ஜின் கங்கை பத்தேகம பகுதியிலும், நில்வள கங்கை தல்கஹகொட பகுதியிலும், அத்தனகல ஓயா துனமலை பகுதியிலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன.

இதேவேளை, கடும் மழை காரணமாக கற்பிட்டி, பாலாவி பிரதேசத்தில் நள்ளிரவு வேளையில் சிக்கித் தவித்த 71 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

மஹாஓயா பெருக்கெடுத்து கிரியுல்ல நகரமும் மூழ்கியுள்ளதால், கொழும்பு – குருநாகல் வழித்தட இலக்கம் 5 இன் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய விவசாயக் குளமான முருங்கன் கட்டுக்கரைக்குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்து, வான் பாய்ந்து வருகின்றது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் தொடர் மழையினால் ஏற்பட்டுள்ள அநர்த்த நிலையினால் 15 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் பெரும் எண்ணிக்கையான வீடுகள் நீரில் மூழ்கியதால் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடைமழையினால் மாவட்டத்தின் நானாட்டான், முசலி மடு, மாந்தை மேற்கு மற்றும் மன்னார் நகர் ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரன்லி டி மேல் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

கடுமையான தொடர் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் சேர்ந்த 3501 குடும்பங்களைச் சேர்ந்த 12350 பொது மக்கள் பாதிப்படைந்து ள்ளதாக அரசாங்க அதிபர் கூர்மை செய்திக்கு மேலும் தெரிவித்தார். மேலும் மழையினால் பாதிக்கப்பட்டவர்களில் 98 குடும்பங்களைச் சேர்ந்த 361 நபர்கள் மன்னார் மாவட்டத்தின் நான்கு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி டி மேல் கூர்மைச் செய்திக்கு மேலும் தெரிவித்தார்.

இது இவ்விதம் இருக்க மன்னார் மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட சுமார் 5700 ஏக்கர் பரப்பளவு வயல் நிலங்கள் மழை வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

 

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 2580 ஏக்கர், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் 990 ஏக்கர், நானாட்டான் பிரதேச செயலாளர் 180 ஏக்கர் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 560 ஏக்கர் ஆகிய பரப்பளவுகளில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை மழையினால் முற்றாக அழிவடைந்துள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் கிராமங்கள் பல நீரில் மூழ்கியுள்ளதினால் அங்குள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் நகர சபை, பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் தொடர்சியாகப் பெய்து வரும் மழையினால் நீரை வெளியேற்றும் பணிகளில் முடக்க நிலை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை மிக்க அவதானத்துடன் இருக்கும் மாறு மாவட்ட அநர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மன்னார் மாவட்ட மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அநர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நன்றி கூர்மை.