சொக்கா மல்லியின் மனு மீதான விசாரணை ஆரம்பம்

217 0

சொக்கா மல்லி என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இரத்தினபுரி, கஹவத்தை பிரதேசத்தில் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்கி தம்மை விடுவிக்குமாறே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நீதியரசர்கள் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ​​ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டாளர்களான நிலந்த ஜயசிங்க, வஜிர தர்ஷன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரமலால் ஜயசேகர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லட்டுவஹெற்றி தமது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

அதன் பின்னர், மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கஹவத்தையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது சாந்த தொடங்கொட சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

2020 ஜூலை 31 அன்று இரத்தினபுரி மேல் நீதிமன்றம் பிரேமலால் ஜயசேகர உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.