‘ஒரே நாடு-ஒரே சட்டம்’ செயலணியும் முஸ்லிம்கள் முன்பாகவுள்ள பொறுப்பும்

292 0
”இச்செயலணியில் முஸ்லிம் பிரதிநிதிகள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருப்பதன் ஊடாக இந்நாட்டு முஸ்லிம்கள் காலா காலமாக அனுபவித்துவரும் உரிமைகளும் சலுகைகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது. இதற்கு நீதியமைச்சர் அலி சப்ரியின் அறிவிப்பும் வலு சேர்ப்பதாக உள்ளது”.

மின்ஸார் இப்றாஹிம்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. 13 அங்கத்தவர்களை கொண்டுள்ள இச்செயலணியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவே நியமித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் விடுத்துள்ளார். இச்செயலணியில் நான்கு முஸ்லிம்கள் அங்கத்தவர்களாக உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் உள்வாங்கப்படவில்லை.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ திட்டத்தை அறிமுகப்படுத்துவதாயின் அதற்காக அமைக்கப்படும் குழுவில் இந்நாட்டில் வாழும் எல்லா இன மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த செயலணியில் அது இடம்பெறவில்லை.

அதேநேரம் இவ்வாறான ஒரு செயலணிக்கு சட்ட துறையில் நிபுணத்துவமும் புலமைத்துவமும் பெற்றவர்கள் உள்வாங்கப்படுவது மிகவும் முக்கியமான விடயமாகும். ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் உள்ளடக்கப்பட்டிருப்பவர்களில் எவரும் சட்டத் துறை சார்ந்தவர்களாக இருப்பதாக தெரியவில்லை.

இவை இவ்வாறிருக்க, இச்செயலணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஞானசார தேரரை அறியாதவர் எவரும் இருக்க மாட்டார்கள். அவர் குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அவரது நோக்கம், எதிர்பார்ப்பு, இலக்கு என்பவற்றை இந்நாட்டில் வாழும் சிறுபிள்ளை கூட அறியும். 2011, 2012 கள் முதல் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷத்தையும் வெறுப்பேச்சையும் மாத்திரமல்லாமல் செயற்பாடுகளையும் துருப்பு சீட்டாக பயன்படுத்தி பிரபல்யம் பெற்றவர் அவர்.

இவ்வாறு சர்ச்சைக்குரிய ஒருவரை ஜனாதிபதி செயலணியொன்றுக்கு தலைவராக நியமித்திருப்பதன் ஊடாக இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பில் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக இற்றைவரையும் ஞானசார தேரர் முன்னெடுத்த வெறுப்பு பேச்சுக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் அரச அங்கீகாரம் அளிப்பதற்கான ஏற்பாடாகவே இச்செயலணியைக் கருத வேண்டியுள்ளது.

இச்செயலணியில் முஸ்லிம் அங்கத்தவர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அவர்களது கருத்துக்களையும் யோசனைகளையும் ஞானசார தேரர் காதுதாழ்த்தி கேட்கக்கூடியவரா என்பதே பெரும் கேள்விக்குரிய விடயம்.
அதேநேரம், இச்செயலணியில் முஸ்லிம் பிரதிநிதிகள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டிருப்பதன் ஊடாக இந்நாட்டு முஸ்லிம்கள் காலா காலமாக அனுபவித்துவரும் உரிமைகளும் சலுகைகளும் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகின்றது. இதற்கு நீதியமைச்சர் அலி சப்ரியின் அறிவிப்பும் வலு சேர்ப்பதாக உள்ளது. அதாவது ஞானசார தேரர் தலைமையிலான இச்செயலணியின் அறிவிப்பு வெளியானதும் நீதியமைச்சர், ‘முஸ்லிம் தனியார் சட்டத்தையும் காதி நீதிமன்ற கட்டமைப்பையும் திருத்தும் வகையிலான சட்டத் திருத்தம் இரு வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும்’ என்றார். இந்த அறிவிப்பானது ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருப்பதானது முஸ்லிம் தனியார் சட்டமும் இலக்காக கொள்ளப்பட்டுள்ளதையே புலப்படுத்துகின்றது.

இந்நாட்டு முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் பௌத்தர்களும், இந்துக்களும், கிறிஸ்தவர்களும் அவரவர் சமய, கலாசார நெறிமுறைகளுக்கு அமையவே திருமணங்களை அமைத்துக் கொள்கின்றனர். இது நேற்று இன்று ஆரம்பமான செயற்பாடு அல்ல. மன்னர்கள் காலம் முதல் இந்த ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றன. இந்த ஏற்பாடுகளுக்கு மன்னர்களும் அங்கீகாரம் அளித்துள்ளனர். அந்த வகையில் தான் முஸ்லிம்கள் தங்கள் விவாக விவாகரத்து விடயத்தை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம் தனியார் சட்டத்தை கொண்டிருக்கின்றனர்.

இந்நாட்டில் நீண்ட வரலாற்று பாரம்பரியத்தை கொண்டிருக்கும் இச்சட்டத்தை இலக்கு வைப்பதன் ஊடாக இந்நாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களை கவலைக்கும் வேதனைக்கும் உள்ளாக்க எதிர்ப்பார்ப்பதாகவே தெரிகின்றது. ஆனால் இந்நாட்டை நேசிக்கும் எவரும் இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுக்க மாட்டார்கள். இந்நாட்டு முஸ்லிம்கள் காலா காலமாக இந்நாட்டு பெரும்பான்மை மக்களுடனும் ஆட்சியாளர்களுடனும் நட்புறவுடனும் நெருக்கமாகவும் தங்கள் தனித்துவங்களைப் பேணி வாழ்ந்து வருகின்றனர். தம்முடன் இணைந்து வாழ்வதோடு நாட்டுக்காகவும் ஆரம்ப காலம் முதல் உழைத்து வருபவர்களுக்கு எதிராக இந்நாட்டை நேசிப்பவர்கள் செயற்பட மாட்டார்கள். அது முற்றிலும் உண்மையான விடயம்.

என்றாலும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் நண்பனாகவும் பலஸ்தீனில் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்காக குரல் கொடுத்து வருபவராகவும் விளங்கும் முன்னாள் ஜனாதிபதியான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பலஸ்தீன ஒருமைப்பாட்டு அமைப்பின் தலைவராக முப்பது வருடங்களுக்கும் மேலாக தலைமை வகித்தவராவார். அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத்தில் கடமையாற்றும் போது பாகிஸ்தான் இராணுவ கல்லூரியிலும் உயர் கல்வி பெற்றுள்ளார். இவ்வாறு முஸ்லிம் நாடுகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளவர்கள் ஆட்சிப் பதவி வகிக்கும் காலத்தில் இந்நாட்டு முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இவ்வாறான நடவடிக்கைகளை இவர்களோ இந்நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்களோ விரும்பவே மாட்டார்கள். ஆனால் ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்காகவும் அவர்களது தேவைகளுக்காகவும் அவர்களைத் திருப்திபடுத்துவதற்காகவும் இந்நாட்டில் செயற்படுபவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களது சதி சூழ்ச்சியின் வெளிப்பாடாகவே முஸ்லிம் தனியார் சட்டம் இங்கு இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.

முஸ்லிம்களும் முஸ்லிம் தனியார் சட்டமும் மிகப் பயங்கரமானவையாக சித்தரிக்கப்பட்டிருப்பதன் வெளிப்பாடே இது என்பதில் ஐயமில்லை. இதன் ஊடாக பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வாழும் முஸ்லிம்களை அவர்களில் இருந்து பிரித்து தூரப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிகின்றது. இந்நடவடிக்கையின் ஊடாக முஸ்லிம்களை உணர்ச்சி வசப்படுத்துவதும் கூட நோக்கமாக இருக்கலாம்.

அதன் காரணத்தினால் இந்த சதி சூழ்ச்சிக்கு முன்பாக முஸ்லிம்கள் மிகவும் கவனமாகவும் முன்னவதானத்துடனும் தூரநோக்குடனும் செயற்பட வேண்டும். இதன் நிமித்தம் சகிப்புத்தன்மையும் பொறுமையும் மிகவும் அத்தியாவசியமானதாகும். தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டின் முக்கிய பெளத்த தேரர்கள், அமைப்புக்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் மற்றும் சிவில் தலைவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதன் நிமித்தம் ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் நடாத்த வேண்டும். அவை சகவாழ்வையும் நட்புறவையும் மேலும் பலப்படுத்துவதோடு நியாயமான பிரதிபலன்களையும் பெற்றுத்தரும். முஹம்மத் (ஸல்) அவர்களை இறைதூதராக ஏற்றுள்ள நாம் அன்னாரை முன்னுதாரணமாக கொள்ள வேண்டியவர்களாவர்.