தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்ற இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்து கொண்டும் இறந்துள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே தமிழக அரசு வறட்சி குறித்து ஆய்வு நடத்த குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதல்வர் பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதையும் வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து, நிலவரியை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். இதை இந்திய கம்யூனிஸ்டு வரவேற்கிறது.
ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண தொகை மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. பயிர்க்கடன்கள் மத்திய கால கடனாக மாற்றப்படும் என்ற அறிவிப்பும் விவசாயிகளுக்கு மேலும் நெருக்கடியைத்தான் ஏற்படுத்தும்.
கர்நாடகாவுக்கு மத்திய அரசு வறட்சி நிவாரண தொகையை வழங்கிவிட்டது. தமிழக அரசும் அதற்கான முயற்சிகளில் வேகம் காட்ட வேண்டும். வார்தா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தவித நிவாரண தொகையையும் வழங்கவில்லை.
தமிழகத்தில் உயிரிழந்த விவசாயிகளில் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு மட்டும் நிவாரணம் அறிவித்து அதிர்ச்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக முதல்வரின் அறிவிப்பு விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இல்லை.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற மத்திய அரசு அவசர சட்டத்திருத்தம் உடனடியாக கொண்டுவர வேண்டும். தமிழக தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கைப்பற்றிய டைரியில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பெயர்கள் இருந்ததாக கூறப்பட்டது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை. தமிழக அரசை மத்திய அரசு தனது கைப்பாவையாக மாற்ற எடுத்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

