பொருட்களின் விலைகள், நூல் அறுந்த பட்டம் போல

207 0

இலங்கையில் பொருட்களின் விலைகள், நூல் அறுந்த பட்டம் போல இன்று உயர்ந்து வருகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

விலைக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தனது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டுமெனின், அரசாங்கம் விலைக் கட்டுப்பாடு தொடர்பான கொள்கையொன்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

பொருட்களின் விலையில் கட்டுப்பாடு இல்லையென்றால், அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்துக்குள், மீட்க முடியாத சோகமான இடத்துக்கு நாடு தள்ளப்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பணம் கொடுத்ததால் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்றும், தற்போது விவசாயிகள் தமது சொந்த உபயோகத்துக்காக பயன்படுத்தும் சீனி, மா மற்றும் எரிவாயு போன்ற பெரும்பாலான பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டிய அவர், நாடு முழுமையான நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.