தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் கிழக்கு பணிப்பாளர் நியமனம்

172 0

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக 36 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர சிரேஷ்ட அதிகாரியான எஸ்.அருள்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தை, இலங்கை பொலிஸ் சேவை ஆணைக்குழுவானது அதன் தலைமையகத்தில் வைத்து நேற்று வழங்கியது.

ஒன்பது மாகாணங்களுக்கான பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நியமிக்கப்பட்ட இரு தமிழர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், 2010ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு நியமனம் பெற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் உள்ளிட்ட பல பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியுள்ளதுடன், 2011ஆம் அண்டு பதவி உயர்வு பெற்று, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக 2017 வரை சேவை புரிந்தார்.

2017ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெறும்வரை சிறுதொழில் முயற்சியாண்மை அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சு, பிரதேச அபிவிருத்தி அமைச்சு, புனர்வாழ்வு அமைச்சு, திறைசேரி இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு, போக்குவரத்து அமைச்சுக்களில் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

மேலும், மேற்படிப்புக்காக புலமைப் பரிசில் மூலம் இந்தியா, ஜேர்மனி, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சென்று பொது நிர்வாகத் துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.