மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் நியமனத்திற்கு எதிரான மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிலக்கச் செய்யுமாறு உத்தரவொன்றை வௌியிடுமாறும் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவொன்றை வௌியிடுமாறும் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவொன்றே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
சோஹித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவை பரிசீலித்த போது அதற்கு முதற்கட்ட எதிர்ப்பை தெரிவித்த சட்டமா அதிபர், அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதியின் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பின் 35 ஆவது சரத்தின் அடிப்படையில் குறித்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி ரீட் கட்டளை ஒன்றை வௌியிட முடியாது என தெரிவித்திருந்தார்.
சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்ட முதற்கட்ட எதிர்ப்பை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதியரசர்கள் குழாம் குறித்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.

