வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு

281 0

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்த பாலமுரளி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் வன்னிய சமுகத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், 68 சமுகத்தைக் கொண்ட சீர் மரபினர்களுக்கு 7 சதவீதமும், மீதமுள்ள 40 சமுகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 2.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் 40 சமூகங்களைச் சேர்ந்த மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முறையாக ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்கி இருக்க வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இருப்பது ஏற்புடையதல்ல. அதனை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. பல்வேறு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு எப்படி தர முடியும்? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டனர்.