நியூசிலாந்து அணியுடன் இன்று மோதல்: ஹர்த்திக் பாண்ட்யா பந்துவீச வாய்ப்பு – விராட்கோலி

271 0

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரை குறை சொல்ல முடியாது என விராட் கோலி கூறியுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

2-வது ஆட்டத்தில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது. ஸ்டார்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

முதல் ஆட்டத்தில் தோற்றத்தால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹர்த்திக் பாண்ட்யா நல்ல நிலையில் இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.

ஹர்த்திக் பாண்ட்யா உடல் தகுதியுடன் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு ஓவர் பந்து வீசுவார். அணிக்கு 6-வது பந்து வீச்சாளர் முக்கியமானதுதான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 2-வது பந்து வீசியதால் 6-வது பவுலர் தேவைப்படவில்லை.

பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து இருந்தால் 6-வது பவுலரை பயன்படுத்தி இருப்போம். 2-வது இன்னிங்சில் விக்கெட்டுகள் தேவைப்படும்போது முதன்மை பந்து வீச்சாளர்ளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

‌ஷர்துல்தாகூர் எங்களது திட்டத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். திறமை வாய்ந்த பந்து வீச்சாளரான அவருக்கு நிச்சயமாக அணியில் நிறைய மதிப்பு கிடைக்கும். அவர் அணிக்கு பெருமை சேர்ப்பார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது அணியின் ஒட்டுமொத்த பந்துவீச்சும் எடுபடவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரை குறை சொல்ல முடியாது.

நியூசிலாந்து அணியில் உள்ள போல்ட் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அவரது பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து திட்டம் வைத்துள்ளோம்.

இவ்வாறு விராட்கோலி கூறினார்.

முன்னதாக இன்று மாலை 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-நமீபியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளன. இதனால் 2-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 130 ரன்னில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்டில் தோற்றது.

நமீபியா முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.