சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது – தமிழக அரசு எச்சரிக்கை

164 0

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள், சரவெடி மற்றும் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 29-ந் தேதி பட்டாசு தொடர்பான வழக்கில், நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அதில் நீதிபதிகள் ‘பட்டாசு வழக்கில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், குறிப்பாக ‘பேரியம் நைட்ரேட்’ ரசாயனம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கும், சரவெடி பட்டாசுகளுக்கும் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது’ என்றும் சுட்டிக்காட்டி இருந்தனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை மீறினால் அந்தந்த மாநில தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், மாநகராட்சி போலீஸ் கமிஷனர் மற்றும் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையையும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.