முல்லைத்தீவு மருதங்குளத்தின் நீரேந்துப் பரப்பில் மணல் அகழ்வுக்கு அனுமதியளிக்க வந்த அதிகாரிகளுக்கு புத்துவெட்டுவான் கிராம விவசாயிகளும் மக்களும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
நேற்று( 29)மருதங்குளப் பகுதிக்கு புவிசரிதவியல் சுரங்கப் பணியகம், வனவளத் திணைக்களம், காணி அதிகாரி, புத்துவெட்டுவான் கிராம அலுவலர் ஆகியோர் வருகை தந்து குளத்தின் பின்பகுதியில் மணல் அகழ்விற்கு அனுமதி வழங்குவதற்கு வருகை தந்தனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு விரைந்த மக்கள்” மருங்குளம் கடந்த பத்தாண்டுகளில் இரு தடவைகள் உடைப்பெடுத்து விட்டன. இவை முழுமையாக புனரமைக்கப்படவில்லை. எனவே குளத்தின் பின்பகுதியில் மணல் அகழ்வு நடைபெற்றால் குளத்திற்கு வேகமாக வருகின்ற வெள்ளம் குளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுப்பதற்கான அபாயம் உள்ளது. குறித்த பகுதியில் குளத்திற்கு அரணாக பாலை, மருத மரங்கள் உட்பட பல வகையான மரங்கள் காணப்படுகின்றன. மணல் அகழ்வு நடைபெற்றால் இவை அழிவடையும். மேலும் புத்துவெட்டுவான் கிராம சுற்றாடல் பாதுகாப்பு குழு இவ் மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்போவதில்லை ” எனத் தெரிவித்தனர்.
இதனை விட வருகை தந்த அதிகாரிகளிடம் எத்திணைக்களத்தினால் மணல் அகழ்விற்கான அனுமதி வழங்கப்படுகின்றது என்ற அனுமதிப் பத்திரங்கள் இல்லை.
எனினும் அவர்களின் கருத்தை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் இது குறித்து முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

