தெமட்டகொட ருவானுக்கு 5வரை விளக்கமறியல்

475 0
தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன் சமிலவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம, இன்று (30) உத்தரவிட்டார்.

ஹெரோயின் கடத்தல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்து, நிதிச் சலவை சட்டத்தின் கீழ் குற்றமிழைத்த குற்றத்துக்காக, சட்டவிரோத சொத்துக்கள் அல்லது வருமானம் தொடர்பில் விசாரணை செய்யும் பிரிவினர், அவரைக் கைது கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர் கொழும்பு தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த சிறிநாயக்க பத்திரனாலகே ருவன் சமில பிரசன்ன எனப்படும் தெமட்டகொட ருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் பிரகாரம் அவரின் சொத்துக்களின் மொத்த பெறுமதி 180 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகவும் பூரணமான மற்றும் தொழில்நுட்ப விசாரணை தேவைப்படுவதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரியதையடுத்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சஞ்சய கமகே, பிணை சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதால் அவரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரிநின்றார்.

எனினும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் மிகவும் நுணுக்கமாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டியிருப்பதால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க முடியாது என தீர்மானித்த நீதிமன்றம், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.