முதல்வரின் அன்பிலும், வரவேற்பிலும் நெகிழ்ந்து போனேன் – ஏழை மாணவி ஷோபனா பேட்டி

154 0

உயர்கல்வி படிக்க மு.க.ஸ்டாலின் உதவி: முதல்வரின் அன்பிலும், வரவேற்பிலும் நெகிழ்ந்து போனேன் ஏழை மாணவி ஷோபனா பேட்டி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் மகள் ஷோபனா. பிளஸ்-2 முடித்த இவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியின்றி ஏழ்மை நிலையில் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 2 மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதினார்.

மாணவியின் கடிதத்தை கனிவுடன் பரிசீலனை செய்த முதல்வர், மாணவி ஷோபனாவுக்கு மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரியில் பி.பி.ஏ. படிக்க ஏற்பாடு செய்தார்.

தனது கடிதத்துக்கு மதிப்பளித்து உயர்கல்வி படிக்க வழி செய்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று ஷோபனா விரும்பியபோதும், சென்னைக்கு நேரில் வந்து சந்திக்க தன்னிடம் பண வசதி இல்லை என்று முதல்வருக்கு மீண்டும் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் பசும்பொன் தேவர் குருபூஜை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தார்.

அப்போது அரசு வாகனத்தை திருவேடகம் கிராமத்திற்கு அனுப்பி வைத்த முதல்வர், மாணவி ஷோபனா, அவரது பெற்றோரை மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்தார்.

பெற்றோர் மற்றும் சகோதரியுடன் மாணவி ஷோபனா

அந்த மாணவிக்கு பட்டபடிப்புக்கான புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்களுடன் நிதி உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் மாணவி ஷோபனாவிடம், நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இதுகுறித்து மாணவி ஷோபனா நிருபர்களிடம் கூறியதாவது:-

என் தந்தை கூலிவேலை பார்த்து வருகிறார். இதனால் ஏழ்மையான நிலையில் வாழும் நான் 12-ம் வகுப்பு முடித்த பிறகு பட்டப்படிப்பு படிக்க ஆசைப்பட்டு தந்தையிடம் தெரிவித்தேன்.

அதன் பின் நான் முதல்வருக்கு கடிதம் எழுதினேன். அதன் பலனாக முதல்வர் எனக்கு கல்லூரியில் சீட்டு பெற்றுக்கொடுத்தார். இதை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். முதல்வரை நேரில் சந்திப்பேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

என் போன்ற சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஏழை- எளியோர்களும் சந்திக்கும் சாமானிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

முதல்-அமைச்சரின் கனிவான வரவேற்பிலும், அன்பிலும் பெற்றோருடன் நானும் நெகிழ்ந்து போனோம். உயர் கல்வி வாய்ப்புடன் ஊக்கமும் தந்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.