தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிப்பு

247 0

வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிக குறைவாக  பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களாக அறிவிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்தது. இதன் எதிரொலியாக அனைத்து அணைகள், ஏரி, குளம், வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டது. கர்நாடக அரசும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தரவில்லை. இதனால் டெல்டா பகுதிகள் பாலைவனமானது. பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகியது.

இதனால் விவசாயிகள் தற்கொலை, மாரடைப்பால் மரணம் என்பது கடந்த சில வாரங்களாக தினசரி நிகழ்வாகி வருகிறது. இதுவரை சுமார் 190க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி, பயிர்களுக்கு நஷ்டஈடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அரசியல் கட்சிகள், விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து விவசாயிகளின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இப்படி ஆய்வு செய்த அறிக்கையை, அமைச்சர்கள், அதிகாரிகள் தமிழக அரசிடம் நேற்று அளித்தனர். அவர்களின் அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:  குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பேரில் விரிவான ஆலோசனை நேற்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிக குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

* வறட்சி காரணமாக விவசாயிகள் தங்கள் கடனை திரும்பச் செலுத்த இயலாது. எனவே, கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் ஆகியவற்றில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் மத்திய கால கடனாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ₹3,028 கோடி பயிர் கடனாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் மத்தியகால கடனாக மாற்றியமைக்கப்படும்.

* தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த வறட்சியில் இருந்து மக்களை பாதுகாக்க பெரும் பொருட்செலவு ஏற்படும். எனவே, மத்திய அரசின் நிதியுதவி கோரப்படும். அதற்கான வறட்சி நிவாரண கோரிக்கை மனு தயார் செய்யப்பட்டு, விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.

* பேரிடர் நிவாரண வரையறையின்படி பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உயர்த்தப்பட்டு 27.10.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின்படி 33 சதவீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு, நிவாரண உதவித்தொகை வழங்கப்படும். நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 5,465 ரூபாய், நெல் தவிர, இதர நீர் பாய்ச்சப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 5,465 ரூபாய், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய், நீண்டகால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7,287 ரூபாய், முசுக்கட்டை பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் என்ற வீதத்தில் நிவாரண தொகை வழங்கப்படும்.

* பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பயிர் இழப்புக்கான இழப்பீட்டு தொகையை பெற இயலும். அதற்கான பயிர் அறுவடை பரிசோதனை விரைந்து மேற்கொள்ளப்படும்.

* வறட்சி காரணமாக வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக  உயர்த்தப்படும்.

* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் ஏரிகள் தூர் வாருதல், குளங்கள் சீரமைத்தல் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள், ₹3,400 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.

* வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவன பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வள துறை வாயிலாக பசுந்தீவனம், அடர்தீவனம் மற்றும் உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இதற்கென ₹78 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

* வறட்சி காரணமாக நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென ரூ.160 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் நீர் ஆதாரங்கள் மற்றும் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென ரூ.350 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* வறட்சி காரணமாக வன உயிரினங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவற்றுக்கு தேவையான தீவனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* பொதுப்பணித்துறை மூலமாக நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்கள் மேம்படுத்தும் பணிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

* கூட்டுறவு வங்கிகள் மூலம் ₹3,028 கோடி பயிர் கடனாக இந்த ஆண்டு  வழங்கப்பட்டுள்ளது.  வறட்சி காரணமாக  விவசாயிகள்  பெற்றுள்ள பயிர்க்கடன் மத்திய கால கடனாக மாற்றியமைக்கப்படும்.

* விவசாய  தொழிலாளர்களுக்கு வேலை வழங்க தேசிய ஊரக  வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150  நாட்களாக  உயர்த்தப்படும்.

* பேரிடர்  நிவாரண வரையறையின்படி  33 சதவீதத்திற்கும் மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள  விவசாயிகளுக்கு, நிவாரண உதவித்தொகை வழங்கப்படும்.

* ஏரிகள், குளங்கள், பாசன  வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் ₹3,400 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

* நகர்புறங்களில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ₹160 கோடியும், கிராமங்களுக்கு ₹350 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும்.