மெகா தடுப்பூசி முகாமுக்காக கையிருப்பில் இருந்த 66 லட்சம் கொரோனா தடுப்பூசிகள், மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்களை தொடர்ந்து தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் 9 மாதங்களில் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. அதிக பேருக்கு தடுப்பூசி போட வசதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல இடங்களில் கூடுதலாக மையங்கள் அமைத்து மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்படுகிறது. 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும் இந்த முகாமில், 2-வது தவணை தடுப்பூசி போடும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

