அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம்

241 0

அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அடிபணியாமல் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, கிழக்கில் உள்ள மண் மாபியாக்களை கட்டுப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டுமேயொழிய, அதிபர் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பான சாத்வீகபோராட்டம், 100ஆவது நாளை அண்மித்துள்ள நிலையில், நாளையும் (இன்று) 22ஆம் திகதியும் எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.

“இதன்மூலம், எமது உரிமையையும் மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் முகமாக 25ஆம் திகதி முதல் 200 மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பாடசாலைகளின் ஆசிரியர்கள் கற்பித்தில் செயற்பாடுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.

“புலமைப் பரிசில் பரீட்சையை கூட உரிய நேரத்தில் இவர்களால் நடத்த முடியாதிருந்த நேரத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, தன்னுடைய புலனாய்வு ஒட்டுக் குழுக்களை மையமாக வைத்துக்கொண்டு, எங்களை அச்சுறுத்திக்கொண்டு இருக்கின்றார்.

“இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாம் எமது சாத்வீக போராட்டத்தை வெற்றீகரமாக நடத்திக்கொண்டு இருக்கின்றோம்” என்றார்.