திருவனந்தபுரம், பாலக்காடு உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

183 0

கேரளாவில் மழை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

இதில் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மலையோர கிராமங்களில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மண்ணில் புதைந்தன. அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மழையின் தாக்கம் சற்று குறைந்து இருந்ததால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்றது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கேரளாவில் மழை தொடர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல் மந்திரி பினராயி விஜயன்
திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல் மந்திரி பினராயி விஜயன் மழை வெள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அங்கு எடுக்க வேண்டிய நிவாரண நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளார். மேலும், மழை தொடர வாய்ப்புள்ளதால் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.