சீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

254 0

201701100740316995_chinese-police-shoot-dead-three-terror-suspects-in-xinjiang_secvpfசீனாவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உஜ்குர் என்னும் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இந்த மாகாணம் மத்திய ஆசியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அமைந்து உள்ளது. உஜ்குர் மக்கள் நீண்ட காலமாக தாங்கள் வசிக்கும் பகுதியை தனி நாடாக அறிவிக்க கோரி போராடி வருகின்றனர். தங்களுடைய லட்சிய நாட்டுக்கு கிழக்கு துர்கிஸ்தான் என்றும் இவர்கள் பெயர் சூட்டி உள்ளனர்.

உஜ்குர் மக்களுக்கு, கடந்த சில ஆண்டுகளாக ஐ.எஸ். தீவிரவாதிகளும் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளும் மறைமுகமாக உதவி வருகின்றன. இதனால் அங்கு அவ்வப்போது பயங்கரவாத சம்பவங்களும், போலீசாருக்கு எதிரான தாக்குதல்களும் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், தெற்கு ஷின்ஜியாங் பகுதியில் உள்ள ஹோட்டான் நகரில் சில்க்ரோடு சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் திடீரென்று வன்முறையில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். ஐ.எஸ். தீவிரவாதிகளும் எதிர் தாக்குதல் நடத்தினர். எனினும் போலீசாரின் அதிரடி தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி ஷின்ஜியாங் மாகாண போலீசார் கூறுகையில், “மூவரும் போலீசாரால் தேடப்பட்டு வந்த தீவிரவாத குழுவினர்தான். இவர்கள் கொள்ளையடிப்பதையும் தொழிலாக கொண்டவர்கள். துப்பாக்கி சண்டை நடந்த இடத்திலேயே மூவரும் பலியாகிவிட்டனர். தீவிரவாதிகள் நடத்திய எதிர்தாக்குதலில் போலீசார் தரப்பில் எந்த உயிர் சேதமும் இல்லை” என்றனர்.

“சீன அரசு ஜின்ஜியாங் மாகாணத்தில் உஜ்குர் மக்களின் கலாசாரத்தை சீரழிக்கும் நோக்கத்துடன் அடக்குமுறையை கையாள்வதால்தான் அங்கு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை சம்பவமும் இதுபோன்றதுதான்” என்று உஜ்குர் மக்களின் உரிமைகளுக்காக போராடும் மனித உரிமை அமைப்புகள் சீன அரசுக்கு எதிராக குற்றம் சாட்டின.இதற்கு சீன அரசு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

சில வாராங்களுக்கு முன்பு, இதே ஹோட்டான் நகரில் 3 தீவிரவாதிகள் ஒரு காரை அரசாங்க கட்டிடத்திற்குள் ஓட்டிச் சென்று அதில் குண்டுகளை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை விளைவித்தனர். 2 பேரை கத்தியால் குத்தியும் கொன்றனர். இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளையும் பின்னர் போலீசார் சுட்டுக் கொன்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.