அரசாங்கத்திடம் ரவிகரன் விடுத்துள்ள கோரிக்கை

176 0

தற்போது விவசாயிகள் உரப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசு உரங்களை இறக்குமதிசெய்து விவசாயிகளுக்கு வழங்குவதுடன், மகாவலி (எல்), வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என பலதரப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய பயிர்ச்செய்கை நிலங்களையும் அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

உரப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைகள் திணைக்களத்தின் முன்பு இன்று (18) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் விவசாயிகளுக்கான உரத்தினை வழங்குங்கள் என்றுதான் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்கின்றோம்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள ஆறு கிராம அலுவலர் பிரிவுளிலும் எங்களுடைய தமிழ் மக்களின் பல்லாயிரக் கணக்கான காணிகளை அரசாங்கம் அபகரித்து சிங்கள மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.

குறிப்பாக தமிழ் மக்களுக்குரிய ஆமையன்குளம், முந்திரிகைக்குளம், சாம்பான் குளம் போன்ற குளங்களும், அதன்கீழுள்ள நீர்ப்பாசனக் காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அரசால் அபகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய உறுதிகள் தமிழ் மக்களிடம் ஏற்கனவே உள்ளன. இவ்வாறிருக்கும்போது அந்தக்காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதோடு மாத்திரமின்றி, சிங்கள மக்களுக்கு புதிய உறுதிகளும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது மிக மோசமான செயலாகும்.

ஏற்கனவே தமிழ் மக்களுடைய பெயரில் காணிகளுக்குரிய உறுதி இருக்கும்போது, சிங்களமக்களுக்கு அந்தக் காணிகளைப் பகிர்ந்தளிப்பதென்பது அப்பட்டமான திருட்டு வேலையாகும்.

அவ்வாறான திருட்டு வேலையை இலங்கை அரசாங்கம், இலங்கைநாட்டின் பிரஜைகளாகவுள்ள தமிழ் மக்கள் மீது மேற்கொள்வது மிகவும் வேதனையளிக்கின்றது.

இந் நிலையில் இங்குள்ள தமிழ் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்வாதாரத்தை நகர்த்துவதற்கு என்னசெய்வது?

இந்த வயல் நிலங்களை நம்பியே இங்குள்ள தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

இப்படியிருக்கும்போது எமது தமிழ்மக்கள் நீர்ப்பாசன வயல் நிலங்களை இழந்துள்ள நிலையில், மானவாரி விவசாய நிலங்களையே அவர்கள் தமது பயிர்ச்செய்கைச் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது அந்த மானாவாரி விவசாய நிலங்களை மகாவலி (எல்), வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் எனப் பலதரப்புக்களும் அபகரிப்பு முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன.

இங்குள்ள தமிழ் மக்களை இந்த அரசாங்கம், இலங்கையின் பிரஜைகளாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு துன்பங்களை ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும்.

அத்தோடு இங்குள்ள எமது தமிழ் மக்கள் எஞ்சியிருக்கின்ற தமது மானாவாரி விவசாயநிலங்களில், பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும்போது, அந்தப் பயிர்ச்செய்கைகளுக்குரிய உரங்களை வழங்காமல் இந்த அரசு எமது மக்களை வாட்டி வதைக்கின்றது.

எனவே எமது விவசாயிகளின் பயிர்ச்செய்கைகளுக்குரிய உரங்களை வழங்குவதுடன், அபகரித்துள்ள எமது தமிழ் மக்களின் பயிர்ச்செய்கைக் காணிகளையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.