புதிய தொழில்நுட்பத்தில் பல வண்ணங்களில் ஒளி சிந்தும் பட்டாசுகள்- சிவகாசியில் அறிமுகம்

147 0

கிராக்ளிங் ட்ரீ பட்டாசு புஸ்வானம் ரகத்தை சேர்ந்தது. இதனை பற்றவைத்ததும் சிறு சிறு சத்தத்துடன் சில்வர் வண்ணத்தில் ஒளி சிந்தும்

இந்தியாவில் பட்டாசு உற்பத்தி மையமாக விளங்கி வரும் சிவகாசியில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன.

இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். நாட்டின் 80 சதவீத பட்டாசு தேவையை சிவகாசி நிறைவு செய்கிறது.

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே பட்டாசு உற்பத்திகள் தீவிரப்படுத்தப்பட்டன. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சுற்றுச்சூழல் பாதிப்பின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு சிவகாசியில் புதிய ரக பட்டாசுகளை அறிமுகப்படுத்துவது வழக்கம்.

குறிப்பாக சிவகாசியில் புதிய ரக வெடிகள் அறிமுகப்படுத்தப்படும். அதிக சத்தத்துடன் வெடிக்கும் இந்த வகை பட்டாசுகள் இளைஞர்களிடையே வரவேற்பை பெறும். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவும், உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவு காரணமாகவும் வெடிகள் தயாரிப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய ரக வெடிகள் அரிதாகவே விற்பனைக்கு வருகின்றன. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒளிகளை சிந்தும் பல்வேறு ரக பட்டாசுகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் ஆலை உரிமையாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று புதிய தொழில்நுட்பத்தில் மாசு ஏற்படாத வகையில் பட்டாசு தயாரிக்கும் முறையை அறிந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சிவகாசியில் பல வண்ணங்களை சிந்தும் ஒளி ரக பட்டாசு தயாரிப்பு மும்முரமாக நடந்தது. புஸ்வானம், தரைச்சக்கரம் கம்பி மத்தாப்பு, ராக்கெட் வெடிகள், சாட்டை, மெர்குரி போன்றவை அதிக அளவில் புதிய தொழில்நுட்பங்களை தயாரித்து அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ரக பட்டாசுகள்

இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பை பெறும். அந்த வகையில் இந்த ஆண்டு பல வண்ணங்களில் ஒளிசிந்தும் புதிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும் புதிய பட்டாசுகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டன. அதன் அடிப்படையில் பல்வேறு கட்ட பரிசோதனைகள் அடிப்படையில் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

கலர் சேஞ்சிங் பாட்ஸ், கலர் சேஞ்சிங் வீல், கிராக் கிளிங் ட்ரீ, ஸ்பின்னர் மவுஸ் என புதிய பட்டாசுகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன. இதில் கலர் சேஞ்சிங் பாட்ஸ் என்ற ரகம் புஸ்வானம் வகையை சேர்ந்தது. இதை பற்ற வைத்தவுடன் முதலில் பச்சை வண்ணத்திலும், அடுத்து சிவப்பு வண்ணத்திலும் ஒளியை சிந்தும்.

ஸ்பின்னர் மவுஸ் பட்டாசு சங்கு சக்கர வகையை சேர்ந்தது. தரையில் சுழலும் போது இந்த பட்டாசு பச்சை, சிவப்பு ஒளியை மாறி மாறி வெளியிடும். சேஞ்சிங் வீல் பட்டாசும் இதே வகையை சார்ந்தது.

கிராக்ளிங் ட்ரீ பட்டாசு புஸ்வானம் ரகத்தை சேர்ந்தது. இதனை பற்றவைத்ததும் சிறு சிறு சத்தத்துடன் சில்வர் வண்ணத்தில் ஒளி சிந்தும்.

மேற்கண்ட 4 புதிய ரக பட்டாசுகளும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதனை வெடிக்கலாம்.

இதேபோல் வெடி ரகங்களிலும் புதிய வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒலியின் அளவு 125 டெசிபல்களுக்கு மேல் இருக்காமல் வெடி ரகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.