நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும்- சோசலிஸ மக்கள் முன்னணி

309 0

vasuஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என்று சோசலிஸ மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் மக்கள் எதிர்ப்பலைகளை மாத்திரமே உருவாக்குவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, இந்த எதிர்ப்பலைகளே அரசாங்கத்தைக் கவிழ்த்துப்போடும் என்றும் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் சோசலிஸ மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார…,

“எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு செயற்பாடும் மக்களின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே அரசாங்கத்திற்கு முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த அரசாங்கத்தை முன்னெடுக்க முடியும்.

எதிர்காலம் குறித்து அரசாங்கத்திற்கு கிடைத்திருக்கும் பிரதான சமிக்ஞையே ஹம்பாந்தோட்டை சம்பவமாகும். அரசாங்கத்தின் அடக்குமுறைகள் அதிகபட்சமாக ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையிலும் அதைவிடவும் அதிகமான மக்கள் எதிர்ப்பு ஏற்பட்டது எவ்வாறு என்பது குறித்து அரசாங்கத்திற்குள் ஆராயப்பட்டு வருகின்றது.

பொலிஸ்மா அதிபரே நேரடியாக ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அன்று கடற்படைத் தளபதியையே ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தை நாங்கள் கண்டிருக்கின்றோம். அரசாங்கத்தை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். அரசாங்கத்தின் செயற்பாடுகளினாலேயே தானாகவே கவிழ்ந்துவிடும்.

மக்களின் ஆணையை மீறி வரிச்சுமையை அதிகரித்தல், பொருட்களின் விலை அதிகரிப்பு, சொத்துக்களை அழித்தல் போன்ற விடயங்களுக்கு மக்கள் பதிலளிக்கின்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் தாமதிப்பதால் போராட்டத்தை மேற்கொள்வதே மக்களிடம் இருக்கின்ற இறுதி வழியாகும். இவ்வாறு மக்கள் எதிர்ப்பலையை யார் ஏற்படுத்துவது? அரசாங்கமே தவிர வேறு யாரும் இல்லை.

எனவே அரசாங்கக் கவிழ்ப்பை அரசாங்கமே செய்கிறது. அரசாங்கத்திற்குள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பலைகள் ஏற்பட்டதன் விளைவாக அரசாங்கம் கவிழ்ந்த வரலாறுகள் உலகில் காணப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.