வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் – வன்முறையில் 4 பேர் பலி

405 0

வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்து உள்ளார்.

வங்காளதேச நாட்டில் உள்ள இந்து கோவில்களில் துர்கா பூஜை விழா நடந்தது. இந்த நிலையில் கொமில்லா நகரில் உள்ள இந்து கோவில்களில் கும்பல் ஒன்று திடீரென்று தாக்குதல் நடத்தியது.

துர்கா பூஜை விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த பக்தர்களை தாக்கினர்.

அதேபோல் கொமில்லா நகருக்கு அருகே உள்ள சந்த்பூரின் ஹாஜிகன்ஜ், சட்டோகிராமின் பன்ஷ்கலி, காக்ஸ் பஜாரின் பெகுலா ஆகிய நகரங்களில் உள்ள இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து நான்கு நகரங்களில் வன்முறை ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது பாதுகாப்பு படையிரையும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பாதுகாப்பு படையினர் கடுமையாக போராடி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறையில் 4 பேர் பலியானார்கள். 22 பேர் காயம் அடைந்தனர்.

சமூக ஊடகங்களில் பரவிய தவறான தகவலே மத ரீதியான கலவரம் ஏற்பட காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. வன்முறை தொடர்பாக இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க 22 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஷேக்ஹசீனா தெரிவித்து உள்ளார்.

ஷேக் ஹசீனா

இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறும்போது, வங்காளதேசத்தில் இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் பற்றிய செய்திகளை அறிந்தோம். அங்குள்ள இந்திய தூதரகம் வங்காளதேச அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. வங்காளதேசத்தில் அரசு ஆதரவுடன் துர்கா பூஜை விழா தொடர்ந்து நடந்து வருகிறது என்பதை நாங்கள் தெரிந்து கொண்டுள்ளோம் என்றார்.