மது, அசைவ பிரியர்களுக்கு வார நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

209 0

தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் வருகிற ஞாயிறு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியை அனைவருக்கும் விரைவாக செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் நல்ல பலன் கிடைத்தது.

இந்த நிலையில் இந்த வாரம் தடுப்பூசி முகாம் இல்லை. இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 29 லட்சத்து 87 ஆயிரத்து 635 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் வருகிற ஞாயிறு (17-ந்தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை. தேவையான அளவுக்கு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. எனவே அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடத்தலாம் என்று எண்ணினோம்.

ஆனால் மது பிரியர்களும், அசைவ பிரியர்களும் ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள்.

அவர்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொண்டு மது, அசைவம் சாப்பிட்டால் பாதிக்கும் என்று தேவையற்ற எண்ணத்தை கொண்டுள்ளார்கள்.

எனவே வருகிற முகாமை வார நாட்களில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று அடுத்த முகாம் நடைபெறும் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.