மாகாண சபைத் தேர்தலுக்காக காத்திருக்கும் தமிழ்க் கட்சிகள்

339 0

கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த மாகாண சபைகளுக்கான தேர்தல், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால், அரசியல்வாதிகள் முடங்கியிருந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு, அவர்களை உற்சாகமடைய வைத்திருக்கின்றது.

முதலமைச்சர் கனவோடும் அமைச்சர் கனவுகளோடும் பலரும் பல மாதங்களாகக் காத்திருக்கிறார்கள். அதிலும், பாராளுமன்றத் தேர்தலில் தோற்றவர்களின் பதவிக்கான காத்திருப்பு என்பது, சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அரசியல் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம் என்பது பதவி, பகட்டுச் சார்ந்தது. மக்களுக்கான உண்மையான அரசியல் தலைவர்களுக்கு பதவியும் பட்டமும் முக்கியமல்ல. அவர்கள், தேர்தலில் வென்றாலும் தோற்றாலும், மக்களுக்காகத் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், அரசியல்வாதிகளைப் பொறுத்தளவில், அவர்களால் பதவி, பகட்டு இன்றி வாழவே முடியாது. தேர்தல் வெற்றிகளுக்காக எல்லாவிதமான தந்திரங்களையும் அரங்கேற்றத் துணிவார்கள்.

இப்படியானவர்களால் தமிழ் அரசியல் பரப்பும், கடந்த பத்து ஆண்டுகளில் நிரப்பப்பட்டுவிட்டது. பதவி, பகட்டை எதிர்பார்த்து, அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் நெருங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

மக்களுக்கான அரசியல் என்பது, மக்களின் எண்ணங்களை, அவர்களின் ஆழ்மனதில் இருந்து பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ் அரசியல் சூழலில், அவ்வாறான நிலை பெரும்பாலும் இல்லை. அநேகமானவர்களின் அரசியல் அரங்காற்றுகைகள், தேர்தல்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படுகின்றன.

ஒத்திவைக்கப்பட்டு வந்த மாகாண சபைத் தேர்தல்களுக்காக, அதிகமான முக்கியத்துவத்துடன் காத்திருந்த தரப்பினர் என்றால், தமிழ்த் தேசிய கட்சிகளைச் சொல்ல முடியும். தென் இலங்கையின் பெரும்பான்மைக் கட்சிகள் கூட, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், பெரிய கரிசனையை வெளிப்படுத்தியிருக்கவில்லை.

ஆனால், மாகாண சபை முறையைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்திருக்கின்ற தமிழ்த் தேசிய கட்சிகள், அந்த நிர்வாகக் கட்டமைப்புக்கான தேர்தலுக்காக, அதிக முக்கியத்துவத்துடன் காத்திருக்கின்றன. இது, அடிப்படையில் முரண்நகை. இந்த முரணுக்குள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும், எந்தவித பாகுபாடுமின்றி இருக்கின்றன.

கடந்த காலங்களில், இந்தியாவையும் 13ஆவது திருத்தத்தையும் எதிர்த்துவந்த முன்னணியினர், அந்த நிலையிலிருந்து மாறிவிட்டனர். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது, 13ஆவது திருத்தச் சட்டத்தையும் மாகாண சபை முறைமையையும் அங்கிகரிக்கும் செயல் என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூறி வந்திருக்கின்றது. 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும் மேற்கண்ட விடயத்தைக் கூறியே, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டது.

ஆனால், சில ஆண்டுகளிலேயே முன்னணியிடம் மனமாற்றம் ஏற்பட்டு விட்டது. மாகாண சபைத் தேர்தலுக்காக, முன்னணியின் முக்கியஸ்தர்கள் தயாராகத் தொடங்கிவிட்டார்கள். முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தொடங்கி, அந்தக் கட்சியின் உறுப்பினர்களிடத்திலேயே கூட, இந்தியாவுடனான அணுகுமுறை மாறிவிட்டது. அண்மையில், யாழ்ப்பாணம் வந்த  இந்திய வெளியுறவு செயலாளர், கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ்க் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு இரவு விருந்தளித்தார்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கஜேந்திரகுமாரின் உடல்மொழி, பல செய்திகளை அப்பட்டமாகச் சொல்லியது. கடந்த காலங்களில், ஊடக மையத்திலும் தேர்தல் மேடைகளிலும், இந்தியா தொடர்பில் அவர் முழங்கி வந்திருக்கின்ற கருத்துகள் எல்லாமும் பொய்யானவையோ என்று தோன்றுமளவுக்கு இருந்தன.

ஏற்கெனவே, முன்னணியில் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தரப்புக்கும் கஜேந்திரகுமார் தரப்பினருக்குமான முரண்பாடுகள் பெரியளவில் சென்றுவிட்டன. கஜேந்திரகுமாரின் அழுத்தங்களைத் தாண்டி, மணிவண்ணன் தரப்பினர் யாழ்ப்பாணம் மாநகர சபையையும் நல்லூர் பிரதேச சபையையும் வெற்றி கொண்டுவிட்டார்கள். இதனால், முன்னணியின் உண்மையான உரித்தாளர்கள் யார் என்கிற கேள்வி இன்னமும் தொக்கி நிற்கின்றது.

அப்படியான நிலையில், முன்னணியின் அடையாளத்தைப் பேணுவதற்கு மாகாண சபைத் தேர்தலில், தன்னுடைய அணியினரை அகில இலங்கை காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிட வைத்து, வெற்றிபெற வைக்க வேண்டும் என்கிற தன்முனைப்பு, கஜேந்திரகுமாருக்கு ஏற்பட்டுவிட்டது.

மாகாண சபைத் தேர்தலில் ஒரு சில உறுப்பினர்களையாவது வெற்றிவெற வைத்தால், முன்னணி உண்மையிலேயே தன்னுடனேயே இருப்பதாகக் காட்டிக் கொள்ளலாம் என்பது அவரது நிலைப்பாடு. இல்லையென்றால், முரண்பாடுகளுக்குப் பின்னராக, மணிவண்ணன் அணி பெற்றிருக்கின்ற முக்கியத்துவம் இன்னமும் அதிகரித்து, முன்னணியின் உரித்துச் சார்ந்த பிரச்சினைகள், எதிர்காலத்தில் இன்னும் பலமாக எழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

கூட்டமைப்பைப் பொறுத்தளவில், பாராளுமன்றத் தேர்தலில் பதவி இழந்தவர்களும், ஏற்கெனவே மாகாண சபையில் உறுப்பினர்களாக இருந்தவர்களுமே, மாகாண சபைத் தேர்தலுக்காகக் காத்திருக்கின்றார்கள்.

இவர்களின் அநேகருக்கு, மாகாண சபையின் நிர்வாகக் கட்டமைப்பின் அதிகார அளவுகள் குறித்துக்கூட, எந்தத் தெளிவும் இல்லை. பெரும்பாலானவர்கள், மாகாண சபைத் தேர்தலை, பதவிகளுக்கான ஒரு கருவியாக மாத்திரமே காண்கின்றார்கள்.

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சியைப் பிடித்தவர்கள் என்கிற ரீதியில், ஒன்பது மாகாண சபைகளிலும், இறுதி இடத்தையே பெற்றுக் கொள்ளும் அளவுக்கு மிகமிகக் குழப்பகரமாக மாகாண சபையை நடத்தியவர்கள் கூட்டமைப்பினர்.

கொழும்பிலிருந்து முதலமைச்சர் வேட்பாளராக அழைத்துவரப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன், தனக்கான பணி என்னவோ அதைச் செய்வதைத் தவிர்ந்து, மற்ற அனைத்து வேலைகளையும், முதலமைச்சர் என்கிற பதவி பிம்பத்தோடு செய்தார். தமிழ் மக்கள் பேரவையும் அவரின் புதிய கட்சியும் அப்படி உருவானவைதான்.

விக்னேஸ்வரன்தான் தன்னுடைய தனிப்பட்ட அரசியலைச் செய்கின்றார் என்றால், அவரைத் தவிர்த்து கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களைச் சரியான புள்ளியில் ஒருங்கிணைத்து, மாகாண சபையை கூட்டமைப்பின் தலைமை நடத்தியதா என்றால், அதுவும் இல்லை. மாகாண சபைக்குள் குழப்பங்கள் ஏற்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இரா.சம்பந்தன், சரியான முடிவுகளை எடுக்கவேண்டிய பல தருணங்களிலும், கடிதங்களை எழுதி விடயங்களைச் சமாளிக்கவே முயன்றார்.

அப்படி மாகாண சபையை, முழுவதுமாகத் தோற்கடித்தவர்களின் தரப்பினரான கூட்டமைப்பினர், இன்றைக்கு மீண்டும் மாகாண சபைக் கனவுகளோடு இருக்கின்றார்கள். குறிப்பாக, பாராளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவிய மாவை சேனாதிராஜாவும் அவரோடு தோற்றுப் போனவர்களும், தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தக்க வைப்பதற்காக, மாகாண சபைத் தேர்தலை குறிவைக்கின்றார்கள்.

ஏற்கெனவே பாராளுமன்றத் தேர்தலில், இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுத்தவர்கள், தற்போது மாகாண சபைத் தேர்தலிலும் அதையே செய்ய எத்தனிக்கிறார்கள். ஆற்றலும் ஆளுமையும் உள்ள இளம்தலைமுறையை, செயற்பாட்டு அரசியலுக்கு அழைத்துவந்து, அவர்களிடம் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்கிற எந்தவித எண்ணமும், கூட்டமைப்பின் தலைவர்களிடம் இல்லை. சுயநலம் மட்டுமே வாழ்வாகப் போய்விட்ட நிலைக்கு, கூட்டமைப்பு எனும் கட்டமைப்பைக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களின் எதிர்பார்ப்பே, மாகாண சபைத் தேர்தல் என்றாகிவிட்டது.

கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில், அங்கு மீண்டும் முதலமைச்சராகிவிடலாம் என்கிற கனவோடு பிள்ளையான் இருக்கிறார். ராஜபக்‌ஷர்களின் அனுசரணை, அவருக்கு இருக்கவே செய்கின்றது. ஏற்கெனவே, எதிர்க்கட்சியில் இருந்தாலும், முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் ராஜபக்‌ஷர்களின் விசுவாசிகளாக வலம் வரும் நிலையில், அவர்களின் ஆதரவையும் வைத்து, கிழக்கு மாகாண சபையில் பிள்ளையானை அமர்த்தும் வாய்புகளை, ராஜபக்‌ஷர்கள் புறந்தள்ள மாட்டார்கள்.

அங்கு, தமிழ்த் தேசிய கட்சிகள் வேண்டுமென்றால், எதிர்க்கட்சி எனும் நிலையை அடையும் அளவுக்கான பலத்துடன் மாத்திரமே இருக்கின்றன. அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், ஆட்சியமைக்கக் கூடிய ஒரே மாகாண சபையாக, வடக்கு மாகாண சபை இருக்கின்றது. அதனை, மீண்டும் கைப்பற்றும் போது, குறைந்தபட்ச அர்ப்பணிப்போடாவது நடத்திச் செல்ல வேண்டும். இல்லையென்றால், எதற்கும் தமிழர்கள் தகுதியற்றவர்கள் என்கிற எண்ணம், அனைத்து இடங்களிலும் பரவிவிடும். அது, எதிர்காலத்தை இன்னும் மோசமாகச் சிதைத்துவிடும்.

புருஜோத்தமன் தங்கமயில்